Thursday, 22 May 2014


என்றாள்;என்றேன்…!!

நான் என்பது பொதுப்பெயர் என்றாள்,
பிரபஞ்சத்தின் துணுக்குகள் தன்னை பிரபஞ்சமாக நினைத்துக் கொள்ளும் மயக்கம் என்றேன்

ஓவியம் என்பது வண்ணங்களின் கலவை என்றால்
இசை என்பது ஒலிகளின் முயக்கம் என்றாள்,
இவையிரண்டுமே புலன்களின் மயக்கம் என்றேன்

கலை என்பது இச்சைகளின் புனிதப்போர்வை என்றாள்,
புனிதம் என்பது கற்பிதங்களின் உருவெளித்தோற்றம் என்றேன்!

ஓவியம் என்பது உணர்வுகளின் வர்ணம் என்றாள்,
வர்ணம் என்பது இசையதிர்வுகளின் கண்காட்சி என்றேன்

மரணம் என்பது உயிரின் பிரிவு என்றாள்,
மரணம் என்பது ஆன்மாவின் விடுதலை என்றேன்

முதுமை என்பது மரணத்தின் முற்றம் என்றாள்,
முதுமை என்பது வாழ்வின் பூரணம் என்றேன்

நான் என்பது பெயர்ச்சொல் என்றாள்,
நாம் என்பது வினைச்சொல் என்றேன்

பெயர்களுக்கு ஏதும் அர்த்தம் உள்ளதா என்றாள்,
அந்த அர்த்தம் அர்த்தப்பட செயல்பட வேண்டும் என்றேன்

பெயர்களுக்குள் என்னை அடைக்க முடியாது, வெறும் பெயரல்ல நான் என்றாள்..
முகங்களுக்குள்ளும் உன்னை முடக்க முடியாது, வெறும் முகமல்ல நீ என்றேன்!

பெயரற்றவளை என்ன பெயர்சொல்லி
அழைப்பது என்றாள்,
முகமற்றவளுக்குப் பெயரெதற்கு என்றேன்.   

கனவு என்பது ஏக்கங்களின் கானல்நீர் என்றாள்,
கனவு என்பது சாத்தியங்களின் முன்னோட்டம் என்றேன்.

கடந்த காலம் என்பது நிகழ்காலத்தின் எச்சம் என்றாள்,
அவை வருங்காலத்தின் அடியுரம் என்றேன்

செல்வம் பெருக்குதல்தான் வாழ்க்கையில் வெற்றியா என்றாள்,
வறுமையை வெல்வது மட்டுமே வாழ்க்கையாகாது என்றேன்.

கலாச்சாரம் என்பது மூடிய இதயங்களின் பிடிவாதம் என்றாள்,
பிடிவாதம் என்பது தோல்வியுற்ற சித்தாந்தங்களின் முட்டுக்கொடுப்பு என்றேன்...!!


Saturday, 2 March 2013


பள்ளி ஆண்டுவிழா -நிஷா

பரிசைத் தவறவிட்ட குழந்தை
தன் தோழி பரிசுபெறும் நிகழ்வை
உற்சாகத்துடன் கொண்டாட.....

தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தது,
இரவு பகலாய் பயிற்சி கொடுத்திருந்த
அம்மாக் குழந்தை..!! 

நீ இரைத்துவிட்ட 
எனக்கான உணவை பொறுக்க, 
நாடெங்கிலும் பறந்துகொண்டிருக்கும்
எளிய பறவை நான்

என் கால்களுக்கடியில் 
பறக்கிறது காலம்,
சக்கரம் கட்டிக்கொண்டு

-
நிஷா மன்சூர்

நெருக்கடிகளின் காலம்  - நிஷா

இந்நிகழ்வுகள் என்னை குழப்பக்கயிற்றிலிருக்கி
கேள்விகளின் திரியைத் தூண்டி
ஸ்திரமின்மையின் கூரிய அலகுகளால்
கொத்திக்கொத்தி சலனப்படுத்தி அலைக்கழிக்கின்றன

கருத்துக்களேதுமற்ற வறண்ட புன்னகைகளை
ஒரு தோளிலும்
கடிவாளக் குதிரையின் முரட்டு மனப்புணர்ச்சியின் வெறியை
மற்றொரு தோளிலும்
சுமந்துகொண்டு திரிகிறேன்

திரையரங்குகளிலிருந்து வெளிவரும் சவங்களின் கண்களில்
குழந்தைகள் கர்ப்பமுறும் காட்சிகளின் கோரபிம்பம்
பலவர்ணப் கலவைகளால் சூழப்பட்ட முகங்கள்
தலைவர்களின் புன்னகையில் கொக்கரிக்கின்றன

கனவுகளில் வந்து ஆர்ப்பரிக்கின்ற
தலையில் காளான்முளைத்த ஜந்துக்கள்
நம் வாயிற்கதவைத் தட்டும்நாள்
வெகுதூரத்திலில்லை

எலிப்புழுக்கைகள் செவ்வெரும்புக்கூட்டங்கள் மற்றும்
பருத்த கொசுக்களென
ஒரு மாபெரும் ஆஷ்ட்ரேவாகிவிட்ட
என் சிற்றறை
நாளாக நாளாக குறுகிக்கொண்டே வருகிறது,
ஒரு சவப்பெட்டியின் வடிவில்..!!

சுவடு-1997

Saturday, 23 February 2013

பரிவர்த்தனை -நிஷா

நீ தந்த துரோகத்தின் வலிகளை 
உனக்கே திருப்பி அனுப்பி வைக்கிறேன்,
என்னால் சுமக்க இயலாதென

தயைகூர்ந்து
என் நம்பிக்கையின் விதைகளை
எனக்கே திருப்பித் தந்துவிடு,
நான் என் கண்ணீர் ஊற்றியாவது
தழைக்கச் செய்து விடுகிறேன்..!!
பிடித்த உணவைச் சொல்லுங்க 
சமைத்துத் தருகிறேன்
எனக்கேட்கும்
மனைவியின் கேள்விக்கு
பதில்கூற முடியாமல் 
திகைக்கிறான்,
கிடைத்ததைத் தின்று
வாழப் பழகியவன்...!!

-நிஷா

நாளை -நிஷா

நேற்றைய ஆறு அல்ல
இன்று ஓடும் ஆறு

இந்த வானமும்
நேற்றிருந்த வானம் அல்ல

நேற்றைய கவலைகளை
விரட்டி விடிகிறது இன்றைய
புத்தம்புது விடியல்

இன்றைய தோல்விகள்
ஈடு செய்யப்படும்,
நாளைய வெற்றிகளால்

நேற்றைய இரவும்
இன்றைய இரவும் ஒன்றல்ல

கரைந்த நிமிடம் அல்ல
பிறந்த இந்த நிமிடம்

வினாடிகளில் மாற்றம் கொள்கிறது
பிரபஞ்சம்

முந்தைய மூச்சை பழையதாக்கி
ஆழ இழுக்கிறோம்,
புதிய மூச்சை

ஒவ்வொரு நொடியிலும்
பல்லாயிரக் கணக்கான
செல்கள் இறந்து
பல்லாயிரக் கணக்கான
புத்தம்புது செல்கள் பிறப்பெடுக்கின்றன

நேற்றல்ல இன்று
இன்றல்ல நாளை

எனினும்
நாளை மற்றுமொரு நாளே....!!

#நாளை மற்றுமொரு நாளே -ஜி.நாகராஜன் நாவல் தலைப்பு