Saturday, 23 February 2013

பரிவர்த்தனை -நிஷா

நீ தந்த துரோகத்தின் வலிகளை 
உனக்கே திருப்பி அனுப்பி வைக்கிறேன்,
என்னால் சுமக்க இயலாதென

தயைகூர்ந்து
என் நம்பிக்கையின் விதைகளை
எனக்கே திருப்பித் தந்துவிடு,
நான் என் கண்ணீர் ஊற்றியாவது
தழைக்கச் செய்து விடுகிறேன்..!!
பிடித்த உணவைச் சொல்லுங்க 
சமைத்துத் தருகிறேன்
எனக்கேட்கும்
மனைவியின் கேள்விக்கு
பதில்கூற முடியாமல் 
திகைக்கிறான்,
கிடைத்ததைத் தின்று
வாழப் பழகியவன்...!!

-நிஷா

நாளை -நிஷா

நேற்றைய ஆறு அல்ல
இன்று ஓடும் ஆறு

இந்த வானமும்
நேற்றிருந்த வானம் அல்ல

நேற்றைய கவலைகளை
விரட்டி விடிகிறது இன்றைய
புத்தம்புது விடியல்

இன்றைய தோல்விகள்
ஈடு செய்யப்படும்,
நாளைய வெற்றிகளால்

நேற்றைய இரவும்
இன்றைய இரவும் ஒன்றல்ல

கரைந்த நிமிடம் அல்ல
பிறந்த இந்த நிமிடம்

வினாடிகளில் மாற்றம் கொள்கிறது
பிரபஞ்சம்

முந்தைய மூச்சை பழையதாக்கி
ஆழ இழுக்கிறோம்,
புதிய மூச்சை

ஒவ்வொரு நொடியிலும்
பல்லாயிரக் கணக்கான
செல்கள் இறந்து
பல்லாயிரக் கணக்கான
புத்தம்புது செல்கள் பிறப்பெடுக்கின்றன

நேற்றல்ல இன்று
இன்றல்ல நாளை

எனினும்
நாளை மற்றுமொரு நாளே....!!

#நாளை மற்றுமொரு நாளே -ஜி.நாகராஜன் நாவல் தலைப்பு
விடைபெறுதல் -நிஷா

என் வலிகள் வீர்யமிக்கவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

என் காயங்களின் தழும்புகள் மறைக்கமுடியாதவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

என் வழித்தடம் கரடுமுரடானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

உங்கள் இரக்கப்பார்வை பொறாமைப்பார்வையாக
மாற்றம்கொள்ளும் தருணம் கொடுமையானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

அகற்றவே இயலாதது என் சுய இரக்கத்தின் முட்போர்வை.
சுருக்கவே முடியாதது என் தனிமை இரவுகளின் நீளம்.
தவிர்க்கவே இயலாதது என் இருப்பின் உறுத்தல்.
எனினும் அடைக்கலமாகிறேன்,
என் நேசமிக்க உறவுகளின் அண்மையின் பாசக்கரங்களுக்குள்.

வறுமை நெரித்ததென் பால்யத்தின் குரல்வளையை.
செழிப்பும் நேசமும் அங்கீகாரமும் மலர்ந்ததென்
இளமையின் வசந்தகாலத்தில்.
பிணியின் நெருக்கடிகள் இறுக்கியதென்
இளமையின் உச்சத்தை.

உங்கள் பொறாமைப்பார்வை இரக்கப்பார்வையாக
மாற்றம் கொள்ளும் தருணத்தை
என்னால் எதிர்கொள்ளவே இயலாதென்பதால்
விடைபெறுகிறேன்,
யாரைக்குறித்தும் எந்த பழிவாங்குதல்களுமில்லை
யாரைக்குறித்தும் எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
யாரைக்குறித்தும் எந்த மனஸ்தாபங்களுமில்லை.......!!