Saturday 15 December 2012


கீற்று -நிஷா

மருத்துவமனை வளாகமெங்கும்
இரைந்து கிடக்கும் 
வலிகளின் வேதனைகளை
மிதிக்காமல் கடக்க 
முடியவில்லை

பிரிதலின் துயரத்துடனும்
நிராதரவின் மிரட்சியுடனும்
மிதக்கின்றன
சோகத்தில் உறைந்த குரல்கள்

இயலாமையும் ஆற்றாமையும்
நம்பிக்கையும் அவநம்பிக்கையும்
பெருக்கெடுத்து ஓடுகின்றன
ரத்த உறவுகளின் புலம்பல்களில்

கடந்தகால உதாரணங்களும்
நிகழ்கால புன்னகைகளும்
மிகுந்த ஆசுவாசத்தைத் தருகிறது
ஆறுதல் தேடும் மனதுக்கு

மலைபோல நம்பியிருப்பது
மருத்துவரையும்
மடிப்பணத்தையும் மட்டுமின்றி
நெக்குருகும் பிரார்த்தனைகளையும்தான்

இழப்பின் துயரம் கொப்புளிக்கும்
முகங்களை எதிர்கொள்ளும் பக்குவம்
இனிமேலும் வாய்க்குமா தெரியவில்லை

மருத்துவர் சொற்களில் மிதக்கும் பூடகம் 
எளிய கேள்விகளால் உலுக்கப் படுகிறது
நூற்றுக்கணக்கான சாவுகள் கண்டு
சுவர்போல் நகர்கிறாள் தலைமை தாதி

எனினும் இச்சூழலை அழகாக்கி
மெளனங்களையும் அவநம்பிக்கைகளையும் தகர்த்து
ஒரு இதமான பரவசத்தை அலைபோல் பரப்புகிறது,
ஒரு பச்சை சிசுவின் முதல் அழுகை…!!

விடலைக் காமம் -நிஷா

ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாய்
இரண்டாம் காட்சி
காமப் படம் பார்த்துவிட்டு
கிராமம் திரும்ப பஸ் இல்லாமல்
குட்டியானையின் பின்புறம் 
சிமெண்ட் மூட்டைகளின் நடுவே
முகம் மறைத்து..
சீருடை நிறம் மறைத்து..
சால்வைபோர்த்தி 
பதுங்கி அமர்ந்திருக்கும் 
விடலைச் சிறுவனால்
மறைக்கவே முடியவில்லை...
அவன் கண்களில் 
பொங்கி வழிந்து 
சிமெண்ட் மூட்டைகளை
நனைத்துக் கொண்டிருக்கும்,
காமக் கடும்புனலை..!!

வார்த்தைகள் ---நிஷா

உன் மனப்பாலுறுப்புக்களுக்கு 
கிளர்ச்சியூட்டுவைக்கும்
எவ்வித வார்த்தைகளும் 
இல்லை என்னிடம்

இவை உனக்கு நினைவூட்டலாம்
நீ மறைத்துவைத்திருக்கும் 
சில துரோகங்களை
சில அயோக்கியத்தனங்களை
சில பொய்ச் சத்தியங்களை
சில நன்றி மறத்தல்களை

அவை உன் கயமைத்தனத்தின்
புன்னகைகளை சாகடிக்கும்
வன்ம வார்த்தைகள் அல்ல
மாறாக 
சுய இரக்கத்தின் குற்ற உணர்ச்சியிலிருந்து
பீறிடும் வடிகால்கள்

மேலும்
உன் பிழைகளின் இருள் அறைகளில்
வெளிச்சமிட்டுக் காட்டும் 
என் வார்த்தைகள் 
உனக்கானவை மட்டுமல்ல
எனக்கானவையும்தான்..!!